‘ வழங்கிய உறுதிமொழிகளை அடுத்த மூன்றாண்டுகளில் நிச்சயம் நிறைவேற்றுவேன்’ – ஜனாதிபதி

“ஐந்து வருடங்களில் நிறைவேற்றுவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்த அனைத்தையும், எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் நிச்சயம் நிறைவேற்றுவேன்.” – என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

கொழும்பு – கண்டியை இணைக்கும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரால், நேற்று (15) பிற்பகல் மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த தலைவர் என்ற வகையில், எப்போதும் விவசாயிகளைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளித்துச் செயற்படுவதாக உறுதியளித்த ஜனாதிபதி , தான் ஆட்சிக்கு வந்த பின்னர் வயல்களில் கால் பதித்து விவசாயத்தில் ஈடுபட்ட இளைஞர்களை மறக்க முடியாது என்றும் அவர்களைத் தொடர்ந்து பயிர்ச் செய்கைகளில் ஈடுபடுமாறு அழைப்பு விடுப்பதாகவும் வலியுறுத்தினார்.

95 ரூபாய்க்கேனும் நெல்லைக் கொள்வனவு செய்து விவசாயிகளைப் பலப்படுத்துமாறு விவசாயத்துறை அமைச்சருக்குத் தான் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

ஊடகங்களுடன் போட்டி இல்லை. நாட்டைக் கட்டியெழுப்பவே நாம் ஆட்சிக்கு வந்துள்ளோம். அபிவிருத்தியின் பங்காளியாக இணைந்திருக்குமாறு, ஊடகவியலாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

பொய்ப் பிரசாரங்களினால் மனம் தளர்ந்துவிடாமல், நாட்டு மக்களின் நலனுக்காக ஒன்றிணைந்துச் செயற்பட வருமாறு, அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

Related Articles

Latest Articles