உரம் பிரச்சினையால் நுவரெலியா மாவட்ட விவசாயிகள் பலர் விவசாயத்தை கைவிட்டுள்ளனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற. ‘சேதனப்பசளை பயன்ப்பாட்டை சரியான முறையில் ஒழுங்குபடுத்தி நடைமுறைப்படுத்தல்’. பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
காபணிக் உரம் அல்லது சேதனப் பசளை என்ற போர்வையில் நாட்டில் ஒட்டுமொத்த விவசாயிகளையும் இந்த அரசாங்கம் நடுத்தெருவிற்கு கொண்டு வந்துள்ளது.
சேதனப் பசளை பயன்படுத்தி விவசாயம் செய்யப்படுவது மிகவும் ஆரோக்கியமான – வரவேற்கத்தக்க திட்டமாகும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஆனால், அதனை உடனடியாக நடைமுறைப்படுத்தி விவசாயிகளை சிரமத்திற்கு உள்ளாக்காமல்அரசாங்கம் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
திடீரென இரசாயன உர இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது. சேதனப் பசளை பயன்பாட்டை அரசாங்கம் வலியுறுத்துகிறது.ஆனாலும், அதற்கான முறையான திட்டம் ஒன்று முன்வைக்கப்படாமையால் விவசாயிகள் பலர் ‘நிலத்தில் பயிர்களை நட்டு – அதற்கு உயிர் கொடுக்க முடியாமல்’ தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக, நுவரெலியா மாவட்டத்தில் சிறியளவு விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாதாரண விவசாயிகள் முதல் மரக்கறி மற்றும் கிழங்கு உள்ளிட்ட ஏனைய பெரியளவு விவசாயிகளும் பெரிதும் கஷ்டப்படுகிறார்கள்.
சேதனப்பசளை முறையாக விநியோகிக்கபடுவதற்கு முன்னர் ‘பயிரிடப்பட்டுள்ள பயிர்களை பாதுகாக்க’ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதன பசளை பயன்பாடு சிறந்த திட்டம். அதற்கு நாம் எதிர்ப்பு கிடையாது. ஆனால் ‘வெறுங்கையில் முழம்போட முடியாது’ என்பதை அரசாங்கம் புரிந்து கொண்டு தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
சேதன பசளை போதியளவு இல்லாத நாட்டில் திடீரென இரசாயன உர இறக்குமதியை தடை செய்தால் என்ன நடக்கும் என்பதை அரசாங்கம் தற்போது உணர்ந்துள்ளது. ஆனால், அதிலும் ஜனாதிபதி தொடர்ந்து இறக்குமதி தடை என்கிறார். ஆனால் அவருக்கு கீழ் உள்ள நிதி அமைச்சர் இறக்குமதி தடையை இரத்து செய்து சுற்றறிக்கை மற்றும் கடிதம் அனுப்புகிறார். இவர்களுக்கு மத்தியில் உள்ள குழப்பத்தால் விவசாயிகள் தலைசுற்றி விழுகின்றனர்.
இரசாயன உரத்தை நம்பி விவசாயத்தில் ஈடுபடும் சிறு விவசாயிகள் பெரும் கஸ்டப்படுகின்றனர். சந்தையில் அவர்களுக்கு உரம் இரண்டு மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதனை தாங்கிக் கொள்ள முடியாது பலர் விவசாயத்தை கைவிட்டுள்ளனர். இந்த பிரச்சினைக்கும் அரசாங்கத்திடம் தீர்வு இல்லை.
உர இறக்குமதி தடையானது நாட்டில் இன்று பாரியளவு பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. இலங்கைக்கு அதிக அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் தேயிலை உற்பத்திதுறையும் படுவீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இலங்கைக்கு உலக அளவில் பெயர் பெற்று கொடுத்த சிலோன் டீ என்ற நாமம் இல்லாது போகும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஒரு வருடத்தில் பறிக்கப்படும் சுமார் 300 மில்லியன் கிலோகிராம் தேயிலை அளவு – இராசாயன உர தடை மற்றும் பற்றாக்குறையால் சம – பாதியாக அதாவது 50% குறையும் நிலை ஏற்பட்டுள்ளதாக அல்ஜசீரா ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டின் வருடாந்த மொத்த அந்நிய செலாவணியில் 1.25 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டித்தரும் தேயிலை துறை வீழ்ச்சியை நோக்கி செல்வது மிகவும் ஆபத்தான விடயமாகும். இது நமது நாட்டின் மொத்த எற்றுமதி வருமானத்தில் 10% வீதமாகும்.
இவ்வாறான நிலை எற்பட்டால், பெருந்தோட்டதுறையில் வேலையில்லா பிரச்சனை தலைத்தூக்கும், பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.
இராசாயன உர இறக்குமதி தடை விடயத்தில் அரசாங்கத்துக்குள் மாறுபட்ட தீர்மானங்கள் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. இதனால் நாட்டு மக்கள் குழம்பிப் போயுள்ளனர். உண்மையில் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண அரசாங்கத்தால் முடியவில்லை.
சேதனப் பசளை என்பது நமது நாட்டில் தயாரிக்கப்பட வேண்டும். நாட்டில் உள்ள உள்ளூராட்சி சபைகளை இந்த உர தயாரிப்பு விடயத்திற்கு முழுமையாக பயன்படுத்த வேண்டும். அதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் ஆளணி உள்ளிட்ட அனைத்தையும் வழங்கி உள்நாட்டில் சேதனப் பசளை தயாரித்து அந்தந்த பிரதேசங்களுக்கு தேவையான விவசாயிகளுக்கு விநியோகிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், இராசாயன பதார்த்தமற்ற உணவுப்பொருட்களை மக்களுக்கு விநியோகிக்கலாம்.
ஆனால், இது எளிதான விடயமல்ல, பல சவால்களை எதிர்க்கொள்ளும் நிலை எற்படும். ஆகவே, இதனை படிப்படியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இன்றேல், நாடு பாரிய உணவு தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்.