2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வெற்றியை பதிவுசெய்து அசத்தியுள்ளது.
2024 ஐபிஎல் தொடரானது பல்வேறு புதிய மாற்றங்களுடன் பரபரப்பாக தொடங்கியுள்ளது.
2024 ஐபிஎல் தொடரானது தொடக்கவிழாவுக்கு பிறகு, ஆர்சிபி மற்றும் சென்னை சூப்பர் சிங்ஸ் அணிகள் முதல் போட்டிக்கு மைதானத்திற்கு வந்தன. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆர்சிபி தலைவர் முதலில் துடுப்பாட்டத்தை தேர்ந்தெடுத்தார்.
விராட் கோஹ்லி மற்றும் டூபிளெசிஸ் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒருபுறம் கோஹ்லியை நிற்கவைத்துவிட்டு மறுபுறம் அடுத்தடுத்து 8 பவுண்டரிகளை விரட்டிய டூபிளெசிஸ் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
4 ஓவர்களுக்கு 40 ரன்களை எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்த டூபிளெசிஸை அதிகநேரம் நிலைக்கவிடாமல் 35 ரன்களில் வெளியேற்றினார் முஸ்தபிசூர். உடன் களமிறங்கிய ரஜத் பட்டிதார் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் இருவரும் அடுத்தடுத்து டக் அவுட்டில் வெளியேற 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆர்சிபி அணி.
ஒருபுறம் நிலைத்து நின்ற விராட் கோஹ்லி சிக்சரடித்து அதிரடிக்கு திரும்ப, ஒரு அற்புதமான கேட்ச் மூலம் கோஹ்லியை 21 ரன்னில் வெளியேற்றினார் அஜிங்கியா ரஹானே. உடன் களத்திற்கு வந்த காம்ரான் க்ரீனை போல்டாக்கி வெளியேற்றினார் முஸ்தபிசூர். அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய முஸ்தபிசூர் அசத்த, 78 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆர்சிபி அணி.
25 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என விரட்டிய அனுஜ் ராவத் 48 ரன்களும், 26 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என பறக்கவிட்ட தினேஷ் கார்த்திக் 38 ரன்களும் அடிக்க 20 ஓவர் முடிவில் 173 ரன்களை குவித்தது ஆர்சிபி அணி.
174 ரன்களை வெற்றி இலக்காக துரத்திய சிஎஸ்கே அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய ரச்சின் ரவிந்திரா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ருதுராஜ் கெய்க்வாட் 3 பவுண்டரிகள் அடித்து வெளியேற, ரச்சின் ரவிந்திரா 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் என பறக்கவிட்டு 35 ரன்களில் வெளியேறினார்.
அடுத்தடுத்து களத்திற்குவந்த ரஹானே மற்றும் டேரில் மிட்செல் இருவரும் இரண்டு இரண்டு சிக்சர்களாக பறக்கவிட சீரான இடைவெளியில் விக்கெட்டை விட்டாலும் இலக்கை நோக்கி விரைவாகவே நகர்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 5வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷிவம் துபே மற்றும் ரவிந்திர ஜடேஜா இருவரும் இறுதிவரை நின்று ஆட்டத்தை முடித்து கொடுத்தனர்.
20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ருதுராஜ் கெய்க்வாடதலைவராக தன்னுடைய முதல் போட்டியிலேயே வெற்றியை ருசித்துள்ளார். சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக தொடர்ந்து 8 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது சென்னை அணி. அடுத்து மார்ச் 26 ஆம் திகதி நடைபெறும் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது சிஎஸ்கே.