” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றிநடைபோட வைப்பதற்கான வியூகங்களை பஸில் ராஜபக்ச தற்போது வகுத்து வருகின்றார். அந்தவகையில் விரைவில் வீறுகொண்டெழுவோம்”
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்னரே பஸில் ராஜபக்ச எம்.பி.பதவியை துறந்துவிட்டார். ஆனாலும் அரசியல் பயணம் தொடரும் என அறவித்தார். அந்தவகையில் தற்போது வெற்றி வியூகம் வகுக்கப்பட்டுவருகின்றது. பலமான சக்தியாக எழுவோம்.
எந்தவொரு தேர்தல் நடத்தப்பட்டாலும் தனித்து போட்டியிடக்கூடிய வல்லமை எம் வசம் உள்ளது. அதேபோல கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கும் பின்நிற்கப்போவதில்லை. மக்களின் தேவைப்பாடு அறிந்து அதற்கேற்ப முடிவு எடுக்கப்படும்.” – என்றார்.










