வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளுக்காக சென்றுள்ள இலங்கையர்கள் 64 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்றுவரை வெளிநாட்டில் பணிபுரியும் 2600 இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மேற்படி பணியகத்தின் பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
ஜோர்தான் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்த இலங்கையர் ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிர் இழந்துள்ளார். அந்த ஆடைத்தொழிற்சாலையில் 350 க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் ஜோர்தானில் சாக்கடலுக்கு அருகிலுள்ள மத்திய நிலையத்தில் மருத்துவக் கண்காணிப்புக்குஉட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மேற்படி நபர்கள் தொடர்பில் அந்தந்த நாடுகளிலுள்ள தூதுவராலயங்கள் செயற்பட்டு வருகின்றன. அதேவேளை கொரோனா தொற்றினால் மரணமடைகின்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு 5 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கும் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
