மத்தியகிழக்கு நாட்டிற்கு வேலைக்காகச் சென்ற மனைவி, வீட்டிலிருந்து வெளியேறி, தூதரக தடுப்புக்காவலில் இருப்பதைக் கேள்வியுற்ற கணவன், தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். இவரது சடலம் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்சோலை பகுதியில் இச்சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை (03) இடம்பெற்றது.
இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான குச்சவெளி -நாவற்சோலை பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் பிரதீபன் (36 வயது) எனத்தெரிய வருகின்றது.
சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, மனைவி வசந்தி என்பவர் மத்திய கிழக்கு நாட்டிற்கு வேலைக்குச் சென்றார். அங்கு சென்று மூன்று மாதங்களான நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற இவர், தூதரக தடுப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மனைவியின் கஷ்ட நிலமை குறித்து கவலைப்பட்ட கணவர், துயரம் தாங்காது மது அருந்திவிட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்ததாக அயலவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் குச்சவெளி பொலிஸாரினால் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படவுள்ளது.










