” இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் அவசர புத்தியாலேயே இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றியிருக்கும். எனவே, இனியாவது தவறுகளை திருத்திக்கொண்டு உரிய வகையில் செயற்படுவதற்கு அவர் முன்வரவேண்டும்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தனது பணியை சரிவர நிறைவேற்றுவதற்கு முன்னரே, அவசரப்பட்டு அறிவிப்புகளை விடுக்கின்றார். இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்கு முன்னரே அந்நாட்டின் ஆதரவு கிடைத்துவிட்டது என கருத்து வெளியிட்டார்.
ஆனால் வெளிவிவகாரத்துறையில் அனுபவமுள்ளவர்கள், ஒரு நாடு ஆதரவு வழங்கும் என உறுதியளித்திருந்தால்கூட அதனை முன்கூட்டியே பகிரங்கப்படுத்தமாட்டார்கள். அவ்வாறு பகிரங்கப்படுத்தினால் சம்பந்தப்பட்ட நாட்டுக்கு பிற நாடுகள் அழுத்தங்களை பிரயோகிக்ககூடும்.
பிரேரணைக்கு எதிராகவே வாக்களிக்கப்படும் என மூன்று வாரங்களுக்கு முன்னர் இந்தியா தெரியப்படுத்தியிருந்தால், அது தொடர்பில் அறிந்துகொண்ட பின்னர் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மௌனம் காத்திருக்க வேண்டும். அதனை விடுத்து முன்கூட்டியே தகவலை வெளியிட்டால், தமிழ்க் கூட்டமைப்பு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தது. மறுபுறத்தில் அமெரிக்காவுடன் இந்தியாவுடன் கலந்துரையாடியது.
எனவே, இலங்கைக்கு முழு ஆதரவை வழங்க திட்டமிட்டிருந்த இந்திய, வெளிவிவகா அமைச்சின் செயலாளரின் அவசரத்தால் முடிவை மாற்றியிருக்கலாம். இதற்கு முன்னரும் ஜெனிவா தொடர்பில் இந்தியாவால் வழங்கிய உறுதிமொழியை அமைச்சரொருவர் பகிரங்கப்படுத்தியதால் வாக்கெடுப்பின்போது இந்தியாவின் முடிவு மாறியது.
ஆகவே, வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கு போதிய அனுபவம் இல்லாவிட்டால், அனுபவம் இருப்பவர்களிடம் ஆலோசனை பெற்று செயற்படவேண்டும்.
அதேவேளை, வாக்கெடுப்பின்போது நடுநிலை வகித்த 14 நாடுகளுடனும் பேச்சு நடத்தி, நிலைமையை எடுத்துரைத்து எதிர்காலத்தில் அந்நாடுகளின் ஒத்துழைப்பை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.” – என்றார் டிலான் பெரேரா.