வேட்பாளர்களான அரச ஊழியரது பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

வேட்பாளர்களான அரசாங்க ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. எஞ்சிய சிறுசிறு பிரச்சினைகள் தொடர்பில் மீண்டும் தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சு நடத்தி தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென, பிரதமர் தினேஷ் குணவர்த்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமைச்சரவைக்கு சென்று அவர்களுக்கான சம்பளத்தை பெற்றுக் கொடுக்க நாம்,நடவடிக்கை எடுத்தோம்.இந்த விடயத்தில் நாம் தேர்தல் சட்டத்தை முழுமையாக நிராகரித்து செயற்பட முடியாது. பொது நிர்வாக அமைச்சர் என்ற வகையில் அதனைபின்பற்றியே, நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும் பிரதமர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று தயாசிறி ஜயசேக்கர மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகிய எம்பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லையே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அதேவேளை, எதிர்க்கட்சி இதனை பிரச்சனையாக்கிக் கொள்ளக் கூடாது. அனைவரும் இணைந்து இதற்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் சபையில் மேலும் தெளிவுபடுத்திய பிரதமர்:

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று என்னோடு பேசும் போதும் இது தொடர்பில் கலந்துரையாடினார்.

முதலில் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நாம் மறந்து விடக்கூடாது. அந்த வகையில் இந்த விடயம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஒன்றாகும்.

இரண்டாவதாக தேர்தல் சட்டமென ஒன்று நடைமுறையில் உள்ளது. அது, நாம் அனைவரும் இணைந்து நிறைவேற்றிய சட்டம். அந்த வகையில் இது விடயத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு இணங்கவே நாம் செயற்பட முடியும்.

தேர்தல் ஆணைக்குழுவின் நிபந்தனையின்படியே அவர்கள் கடமைக்கு செல்வது தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளோம். நாம் தேர்தல் ஆணைக்குழுவை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி இந்த செயற்பாடுகளை மேற்கொண்டோம்.

தற்போது பெருமளவானோருக்கு இந்த நிவாரணம் கிடைத்துள்ளது. சில இடங்களில் சிக்கல்கள் இருக்கலாம். அதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஏற்கனவே கேட்டுக் கொள்ளப்பட்டது போல், நாம் அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தோம். தாம் போட்டியிடும் தேர்தல் தொகுதிக்கு வெளியே அருகிலுள்ள பிரதேசத்தில் கடமைக்கு செல்லுமாறு நாம் சுற்றறிக்கை வெளியிட்டிருந்தோம்.

அவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படும் இடம் தொடர்பில் பிரச்சனைகள் இருந்தால் தேர்தல் ஆணைக்குழுவுடன் பேசி அதனை தீர்க்க முடியும். எவ்வாறெனினும் முழுமையாக தேர்தல் சட்டத்திற்கு மாறாக செயற்பட முடியாது.

வேட்பாளர்களான அரசாங்க ஊழியர்கள் விடுத்த வேண்டுகோள் தொடர்பிலும் நாம் தேர்தல் ஆணைக் குழுவுடன் அவ்வப்போது கலந்துரையாடி யுள்ளோம்.

இதில் எந்த அரசியல் பிரச்சனையும் கிடையாது. இதில் சிறிய சரி செய்தல் ஒன்று மட்டுமே உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.
…..

Related Articles

Latest Articles