தனக்கு சேறுபூசும் விதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் முகநூல் பக்கம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகளை நீக்குமாறு நீதிமன்றம் கட்டாணை பிறப்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வேலுகுமார், ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் முடிவை அண்மையில் எடுத்திருந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதியை ஆதரிக்கும் முடிவை எடுப்பதற்காக வேலுகுமார் எம்.பி., ‘பார் பேமீட்’ வாங்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டை தயாசிறி ஜயசேகர முன்வைத்திருந்தார். இது தொடர்பான காணொளி அவரது முகநூல் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிடப்பட்டிருந்தன.
இந்த குற்றச்சாட்டை நிராகரித்த வேலுகுமார், இதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கும் நடவடிக்கையில் இறங்கினார்.
இதற்கமைய இது தொடர்பில் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. வேலுகுமார் எம்.பியின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சிவேந்திரன், கனிஷ்ட சட்டத்தரணி சிவானந்தராஜா உள்ளிட்ட சட்டக்குழுவினர் முன்னிலையாகி இருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தொடர்பாக அவதூறான மற்றும் தவறான தகவல்களை சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியிடப்படுவதை தடுத்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக தடை கட்டளையை கொழும்பு பிரதான மாவட்ட நீதவான் சந்துன்விதான பிறப்பித்துள்ளார்.
அக்குரஸ்ஸவில் ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் தயாசிறி ஜயசேகர எம்.பி தெரிவித்த கருத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், உண்மைக்குபுறம்பான மற்றும் தீங்கிழைக்கும் காரணத்தால் ஏற்பட்ட தவறான அபிப்பிராயத்துக்காக 500 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முறைப்பாட்டில் முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த மாவட்ட நீதவான், தயாசிறி ஜயசேகர எம்.பியின் முகநூல் பக்கத்திலோ அல்லது ஜக்கிய மக்கள் சக்தியின் முகநூல் பக்கம் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலோ இது தொடர்பான விடயங்களை மேலும் வெளியிடுவதை தடுக்கும் தடை உத்தரவை பிறப்பித்ததுடன், எதிர்வரும் 19ஆம் திகதி இது தொடர்பான விடயங்களை முன்வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாருக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்பும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன என்று அவரின் சட்ட ஆலோசகர்கள் தெரிவித்தனர்.
