ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் அதிவேக ரயில்கள் 2 மோதி இடம்பெற்ற விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.
சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நேற்று (18) , இரவு 7.45 மணியளவில் கோர்டோபா (Cordoba) அருகே இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
மலாகாவிலிருந்து (Malaga) மட்ரிட் நோக்கி சுமார் 300 பயணிகளுடன் சென்ற அதிவேக ரயில் தண்டவாளத்தை விட்டு விலகி, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மற்றுமொரு ரயிலுடன் வேகமாக மோதியதில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
எதிர்ச் திசையில் மட்ரிட்டிலிருந்து உல்வா (Huelva) நோக்கி வந்த ரயிலில் சுமார் 200 பயணிகள் இருந்துள்ளனர்.
ஆரம்பத்தில் 21 பேர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் மட்ரிட்டிலிருந்து சென்ற ரயிலின் சாரதியும் ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்களில் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் அனைவரும் ஹெலிகொப்டர்கள் மற்றும் அம்பியூலன்ஸ் வண்டிகள் மூலம் வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான ரயிலில் இருந்த ஊடகவியலாளர் ஒருவர் கூறுகையில், விபத்தின் போது ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது போன்ற உணர்வு இருந்ததாகத் தெரிவித்தார்.
விபத்து நடந்த தண்டவாளப் பகுதி நேரான பாதையாக உள்ளதோடு, அது கடந்த மே மாதம் புதுப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையிலும், ரயில் தடம் புரண்டமை “மிகவும் விசித்திரமானது” என ஸ்பெயினின் போக்குவரத்து அமைச்சர் ஒஸ்கார் புவென்டே தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தைத் தொடர்ந்து மட்ரிட் மற்றும் அண்டலூசியா பிராந்தியங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez), இது தனது நாட்டிற்கு “ஆழ்ந்த வேதனையளிக்கும் இரவு” எனத் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிட்டுள்ளார்.










