போர் நிறுத்தம் தொடர்பில் ஹமாஸ் அமைப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனையை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. அத்துடன், காசாவின் எந்த பகுதியையும் ஹமாஸ் ஆள்வதற்கு இடமளிக்கமாட்டோம் எனவும் அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி, இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினர் மூன்று கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை அண்மையில் முன்வைத்தனர்.
இதன்படி, முதல் கட்டத்தில் 19 வயதுக்குப்பட்ட இஸ்ரேல் பிணைக்கைதிகள், முதியவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், அதற்கு ஈடாக சிறையில் 1,500 பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.
2 ஆம் கட்டத்தில் ஆண் பிணைக்கைதிள் விடுவிக்கப்படுவார்கள். 3-ம் கட்டத்தில் உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என்று ஹமாஸ் கோரி இருந்தது.
எனினும், ஹமாஸ் அமைப்பினர் கோரிக்கையை இஸ்ரேல் பிரதமர் நிராகரித்துள்ளார். ஹமாஸ் அமைப்பு விடுத்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் ஒரு மாயை எனவும் அந்த அமைப்புக்கு எதிராக முழுமையான வெற்றியை அடையும் வரை போர் தொடரும் எனவும் இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார்.