ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
மாலை 3.30 மணிக்கு ஆமதாபாத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.
கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி தனது முதல் ஆட்டத்தில் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் வீழ்ந்தது. அடுத்த ஆட்டத்தில் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை வீழ்த்தியது.
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் 277 ஓட்டங்கள் குவித்து ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ஓட்டங்கள் எடுத்த அணி என்ற மகத்தான சாதனையை படைத்து அனைவரையும் மலைக்க வைத்தது.
விசாகப்பட்டினத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 13-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியன் சென்னை அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சையும், 2-வது ஆட்டத்தில் 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சையும் தோற்கடித்து வலுவான நிலையில் இருக்கிறது. சென்னை அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசிக்கும் ஆவலுடன் தயாராகி உள்ளது.