” எத்தனை இடையூறுகள் வந்தாலும் , .அக்கரபத்தனை சித்திவிநாயகர் ஆலய கும்பாபிஷேகம் திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறும்.” என ஆலய நிர்வாக சபையின் செயலாளர் சுப்பிரமணியம் பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்
” எங்களுடைய அக்கரபத்தனை நகரில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலயம் புணர் நிர்மானம் செய்யப்பட்டு எதிர்வரும் 23 ஆம் திகதி கும்பாபிஷேகத்தை நடாத்துவதற்கு ஆலய நிர்வாக சபையும் பொது மக்களும் தேவையான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் கடந்த 02.01.2022 ஞாயிற்றுக் கிழமை இனந்தெரியாத நபர்களால் ஆலயத்தின் சிற்பங்களும் சிலைகளும் சேதமாக்கப்பட்டன.
இது தொடர்பாக ஆலய நிர்வாக சபை அக்கரபத்தனை காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டது.இதன் காரணமாக பொலிசார் தற்பொழுது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை.
இந்த சம்பவத்தின் மூலமாக எங்களுடைய ஆலயத்தில் நடைபெற இருந்த கும்பாபிஷேக நிகழ்வை தடுத்து நிறுத்த முடியும் என யாரும் நினைத்திருந்தால் அது அவர்களின் அறியாமையாகும்.
நாங்கள் திட்டமிட்டபடி எதிர்வரும் 19 ஆம் திகதி பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு 23 ஆம் திகதி கும்பாபிஷேகத்தை நடத்துவதற்கு ஆலய நிர்வாக சபை தீர்மானித்திருக்கின்றது.அதன்படி தற்பொழுது வேலைகள் துரிதமாக்கப்பட்டு சேதமாக்கப்பட்ட அனைத்து சிற்பங்களையும் திருத்தி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே திட்டமிட்டபடி கும்பாபிஷேக நிகழ்வு இடம்பெறும் பக்தர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்து விநாயகப் பெருமானின் அருளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.










