ஒருமாத காலமாக மூடப்பட்டுள்ள அக்கரப்பத்தனை, அல்பியன் தேயிலை தொழிற்சாலை இன்னும் ஒரு வாரத்துக்குள் மீள செயற்பட ஆரம்பிக்கும் என்று தோட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 520 கிலோ தேயிலை களவுபோன சம்பவத்தின் பின்னர், தேயிலை தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் அவை செயற்பாட்டில் இல்லை. இந்நிலையில் இது விடயம் தொடர்பில் தொழிலாளர்கள்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இவ்விடயம் சம்பந்தமாக இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் , உப தலைவர் சச்சிதானந்தன் உள்ளிட்டோர் தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
” களவாடப்பட்ட தேயிலைக்கும் அங்கு தொழிற் புரிகின்ற தோட்ட தொழிலாளர்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை. எனவே, தொழிற்சாலை ஒரு வாரத்துக்குள் இயங்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” – எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஒரு வாரத்தில் தொழிற்சாலை இயக்கப்படும் என தோட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
டி. சந்ரு