அக்கரப்பத்தனை பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
சபையின் தவிசாளர் சத்தியமூர்த்தி ரதிதேவி தலைமையில், டிசம்பர் மாதத்திற்கான பொதுச் சபைக் கூட்டம் இன்று அக்கரப்பத்தனை பிரதேச சபையின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தின் ஆரம்பத்தில், சமீபத்தில் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தவிசாளர் 2026ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தை சபையின் முன் சமர்ப்பித்தார்.
இன்றைய கூட்டத் தொடரில் தவிசாளர் உட்பட மொத்தம் 14 உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். வரவு–செலவுத் திட்டத்தின் மீது தீர்மானம் எடுக்க, இரகசிய வாக்கெடுப்பு நடத்த சபையில் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி நடைபெற்ற வாக்கெடுப்பில்,
வரவு–செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 6 உறுப்பினர்கள் வாக்களித்ததுடன்,
எதிராக 8 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
மேலும், ஒரு உறுப்பினர் கூட்டத்திற்கு வருகை தரவில்லை.
இதன் விளைவாக, பெரும்பான்மை வாக்குகளால் அக்கரப்பத்தனை பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்டம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
கௌசல்யா










