இரத்தினபுரி, கஹவத்தை பெருந்தோட்ட யாக்கத்தின் வெள்ளந்துரை தோட்ட முகாமைத்துவத்தின் அடாவடித்தனத்தினால் அங்கு தற்காலிகமாக அமைத்திருந்த குடியிருப்பு உடைக்கப்பட்டமைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஏ.பி.சக்திவேல் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
மலையக மக்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குரல் கொடுக்கும். அதேபோல எமது மக்களை சீண்டி பார்க்கும் போது கைகளை கட்டிக்கொண்டு அறிக்கைகளை விடுத்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.
மக்களுக்காக களத்திலே நிற்பதுதான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். 200 வருட வரலாற்றை கொண்ட மலையக மக்களுக்கு அன்று முதல் இன்று வரை ஒரு காவல் தெய்வமாக இருப்பது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மட்டுமே. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான், மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் மக்களின் பிரச்சினைகளுக்காக களத்திற்கே சென்று குரல் கொடுத்தவர்கள். அவ்வழியில் வந்த இன்றைய பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் ஒரு வீர தலைவன். அஞ்சா நெஞ்சம் படைத்தவர் களத்திலே நின்று போராடி ஜெயிக்கும் ஆளுமை மிக்கவர். மலையக மக்களுக்கு எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் களத்தில் நின்று நீதியை பெற்றுக் கொடுத்தவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான்.
அதேபோல அவரின் புதல்வரும் அவரின் கொள்கைகளை பின்பற்றி இன்று மக்களின் வரவேற்பை பெற்று வருகின்றார். எமது மக்களுக்கு எங்கு பிரச்சினை ஏற்படுகின்றதோ அங்கெல்லாம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குரல் ஒலிக்கும். தோட்ட மக்களை தோட்ட நிர்வாகங்கள் தொடர்ச்சியாக சீண்டுவதையும் தாக்குதல்களை மேற்கொள்வதையும் உடனடியாக நிறுத்த வேண்டும். தொடர்ந்து இவ்வாறான இனவாத செயல்கள் இடம்பெறுமானால் அதற்கு தகுந்த பாடங்களை புகட்ட நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார்.
தலவாக்கலை பி.கேதீஸ்
