‘அடாவடி அரசியலில் ஈடுபடுபவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்’

வன்முறை அரசியல் என்பது ஜனநாயக விரோதச்செயலாகும். அவ்வாறு அடாவடி அரசியலில் ஈடுபடுபவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்பதுடன் கொள்கை அடிப்படையில் அரசியல் நடத்தும் எம்மை பாராளுமன்றம் அனுப்பிவைக்கவேண்டும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலாயுதம் தினேஷ்குமார் கோரிக்கை விடுத்தார்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவுபெறுவதற்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தினேஷ்குமாருக்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது.

இந்நிலையில் மஸ்கெலியா பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார். இது தொடர்பில் மேலும் கூறியதாவது.

“ விகிதாரசார தேர்தல் முறையால் விருப்பு வாக்குகளுக்காக ஒரே அணியைச்சேர்ந்த உறுப்பினர்கள்கூட முட்டிமோதிக்கொள்கின்றனர். பணபலம் படைத்தவர்கள் கோடிகளை வாரிவழங்கி விளம்பரம் செய்கின்றனர். இதனால் கொள்கை அரசியல் என்பது இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றது. அதற்கு நாம் உயிர் கொடுக்கவேண்டும். கடினமாக இருந்தாலும் அதனை செய்யவேண்டும்.

ஏனெனில் சமூகமாற்றத்துக்கான எமது அரசியல் பயணத்தில் இதுவும் ஒன்று.  தெளிவான கொள்கை இருந்தால் மாத்திரமே இலக்கை அடையமுடியும். அவ்வாறு இல்லாததால்தான் சிலருக்கு சந்தர்ப்பவாத அரசியலை நடத்தவேண்டிய நிலை ஏற்படுகின்றது.தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் சம வாய்ப்புகள் இருக்கவேண்டும் என தேர்தல் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இது நடைமுறையில் இல்லை. இதனால்தான் சாராயத்தைக்கூட அன்பளிப்பாக வழங்கி பணபலம் படைத்தவர்கள் வாக்குகளை கொள்ளையடித்துவருகின்றனர்.

இத்தகைய அரசியலானது ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தலாகும். இப்படியானவர்கள் பாராளுமன்றம் சென்றால் நாளை எதனையும் செய்யக்கூடும்.ஆகவேதான் கொள்கைவகுத்து, திட்டங்களை முன்வைத்து நேர்வழியில் பயணிக்கும் எம்மைபோன்றவர்களை மக்கள் சபைக்கு அனுப்பவேண்டும்.எங்களுக்கும் ஒரு வாய்ப்பை தந்து பாருங்கள். அரசியல் என்பது மக்களுக்கானது என்பதை நிச்சயம் நிரூபித்துக்காட்டுவோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles