அவுஸ்திரேலிய வீரர் வில் புகொவ்ஸ்கி துடுப்பெடுத்தாடும்போது பந்து அடிக்கடி தலையில் தாக்கியதன் காரணமாக 27 வயதிலேயே அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.
மேலும் பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதால் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
புகொவ்ஸ்கி 2021 இல் சிட்னியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடி முதல் இன்னிங்ஸில் அரைச்சதம் (62) ஒன்றை பெற்றிருந்தார்.
அந்தப் போட்டியின்போது தோள்பட்டை காயத்திற்கு உள்ளானதால் அந்த தொடரில் இருந்து விலகினார். எனினும் அவரது கிரிக்கெட் வாழ்வில் 12 தடவைகள் தலையில் பந்து தாக்கி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். அவர் கடைசியாக 2024 மார்ச் மாதமே கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஆடியுள்ளார்.
ஷபில்ட் ஷீல் தொடரில் டஸ்மேனியா அணிக்கு எதிராக விக்டோரிய அணிக்காக ஆடியபோது கடைசியாக ரிலி மெரடித் வீசிய பந்து அவரது தலையில் தாக்கியது. அது பயம் தருவதாக இருந்தது என்று அந்த சம்பவம் குறித்து புகொவ்ஸ்கி அவுஸ்திரேலிய வானொலி நிலையத்திற்கு தெரிவித்துள்ளார். ‘
ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் எனது மூளைக்கு இன்னும் பாதிப்பை ஏற்படுத்தும் அச்சுறுத்தலில் ஈடுபட நான் விரும்பவில்லை’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
புகொவ்ஸ்கி தனது முதல்தர கிரிக்கெட் வாழ்வில் 2350 ஓட்டங்களை பெற்றிருப்பதோடு இதில் மூன்று இரட்டைச் சதங்கள் உட்பட ஏழு சதங்களை பெற்றுள்ளார். முதல்தர போட்டிகளில் அவரது ஓட்ட சராசரி 45.19 ஆகும்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றிருக்கும் புகொவ்ஸ்கி 2015 இல் தனது முதல்தர கிரிக்கெட்டை ஆரம்பித்த மெல்பேர்ன் கிரிக்கெட் கழகத்தின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.