ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் போட்டியில் ஐதராபாத் – லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐதராபாத் அணி இந்த சீசனில் இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. தனது எஞ்சிய 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்றால் தான் அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.
நடப்பு தொடரில் 3 முறை 260 ஓட்டங்களுக்கு மேல் குவித்து வியக்க வைத்த ஐதராபாத் அணியின் பேட்டிங் வலுவாக இருக்கிறது. இருப்பினும் அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன்கள் சோபிக்க தவறும்பட்சத்தில் அந்த அணி தடாலடியாக சரிவை சந்திக்கிறது.
லக்னோ அணியும் 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளி பெற்றுள்ளது. புள்ளி பட்டியலில் ஐதராபாத்துக்கு இணையாக இருக்கும் லக்னோவும் அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர எஞ்சிய ஆட்டங்களில் குறைந்தபட்சம் இரண்டில் வெற்றி பெற்றாக வேண்டும்.
வெற்றிப்பாதைக்கு திரும்பி 7-வது வெற்றியை ருசித்து அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்த இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மூன்று முறையும் லக்னோ அணியே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.