“ நாட்டில் முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் உள்ளது, அத்தேர்தலில் ராஜபக்சக்கள் மக்களால் முழுமையாக துடைத்தெறியப்படுவார்கள்.” – என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாடு இன்னும் இருள்சூழ்ந்த பாதையில்தான் பயணித்துக்கொண்டிருக்கின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் என்பது தீர்க்கமானது. இதனால் முன்கூட்டியே ஆட்சியாளர்களால் தேர்தல் நடத்தப்படலாம். அது உள்ளாட்சிசபை, மாகாணசபை தேர்தலாக இருக்காது.
பொதுத்தேர்தலாகவே அமையும். அத்தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதும் தெரியாது. ஆனால் இந்த நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுவருவதற்கு பொறுப்புக்கூற வேண்டிய ராஜபக்சக்கள் நிச்சயம் துடைத்தெறியப்படுவார்கள்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 9 வீத வாக்குகள் மட்டுமே உள்ளது. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மட்டுமே ஒரு ஆசனத்தை பெறக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது.
அதேவேளை, எமது பிராந்தியத்தில் மாலைதீவில் ஜனாதிபதி தேர்தல் முடிந்துவிட்டது, பொதுத்தேர்தல் நடத்தப்படாக வேண்டும்.
பங்களாதேஷில் நடந்து முடிந்துவிட்டது.
பாகிஸ்தானிலும் தேர்தல் நடைபெற்றது. இதனால் இலங்கைக்கு பாரிய தாக்கங்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்தியாவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பிரதமர் மோடி வெற்றிபெறுவார். எனவே, இங்கு ஆட்சிக்கு வருவது யாராக இருந்தாலும் பொருளாதாரத்தில் பலமாக வளர்ந்துவரும் இந்தியாவுடன் கொடுக்கல் – வாங்கலில் ஈடுபட்டே ஆகவேண்டும்.
அடுத்தது அமெரிக்காவில் ஏற்படும் மாற்றம் எமக்கு தாக்கம் செலுத்தாது. சட்ட ரீதியிலான தடங்கள் இல்லையெனில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெறுவார்.” – என்றார்.
