அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
சர்வதேச அளவில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், கிம் ஜாங் உன் அமெரிக்காவை மிரட்டும் தொனியில் பேசியுள்ளது கொரிய பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
உலகின் மர்ம பிரதேசமாக அறியப்படும் நாடு வடகொரியா. கொரிய தீப கற்பத்தில் அமைந்து இருக்கும் வடகொரியாவில் அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். வடகொரியா மக்கள் பிற நாட்டு மக்கள் வாழும் சுதந்திர வாழ்க்கையை எல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாது. வெளி உலக தொடர்பு இன்றி வாழும் வடகொரிய மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.
சர்வாதிககார ஆட்சி நடத்தி வரும் வரும் கிம் ஜாங் உன் வல்லராசு நாடான அமெரிக்காவையும் மிரட்டி வருகிறார். அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுடன் தீராப்பகையை கொண்டு இருக்கும் கிம் ஜாங் உன் அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி ஜப்பான், தென்கொரிய உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தி வருகிறார்.
சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் சோதனை போன்றவற்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில்தான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராகவும் அணு ஆயுத தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என்று கிம் ஜாங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிம் ஜாங் உன் இவ்வாறு எச்சரிக்கை விடுப்பது இது முதல் முறை கிடையாது.
ஏற்கனவே பல முறை இப்படி எச்சரிக்கைகளை கிம் ஜாங் உன் விடுத்து இருக்கிறார். ஆனாலும் தற்போது அமெரிக்கா அதிபர் தேர்தலை எதிர்கொண்டு இருக்கும் இந்த சமயத்தில் கிம் ஜாங் உன் இவ்வாறு மிரட்டல் விடுத்து இருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்று இருக்கிறது.
மேலும் கிம் ஜாங் உன் கூறுகையில், “தென்கொரியாவும் அமெரிக்காவும் கூட்டு ராணுவ பயிற்சி மூலம் தங்களின் அணு ஆயுத பலத்தை வலுப்படுத்த முயற்சிக்கிறார்கள். இதனால், கொரிய தீபகற்பத்தில் பாதுகாப்பு சமநிலை அதிகரித்துள்ளது. இதற்கு வடகொரியாவின் அணு ஆயுத பயன்பாடுதான் பதிலாக இருக்கும்” என்று எச்சரித்துள்ளார்.
தென்கொரியாவிடம் அணு ஆயுதங்கள் இல்லை என்றாலும் சமீபத்தில் அந்த நாடு, அமெரிக்காவுடன் மெற்கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தங்களால் கோபம் அடைந்த கிம் ஜாங் உன் இவ்வாறு பேசியிருக்கலாம் எனத் தெரிகிறது.