நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (26) அதிபர் ஆசிரியர் சங்கங்கள் சம்பள உயர்வு குறித்து சுகயீன விடுமுறையில் பணி பகிஷ்கரிப்புடன் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக நானுஓயா மற்றும் நுவரெலியா பகுதிகளில் பாடசாலைகளில் மாணவர்களின் வருகை மந்தக்கதியில் காணப்படுகின்றது.
நானுஓயா மற்றும் நுவரெலியா பகுதிகளில் அதிபர்கள், ஆசிரியர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள் சுகவீன விடுமுறை காரணமாக கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பெற்றோரும் மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையை பொருட்படுத்தாது ஒரு சில மாணவர்கள் பாடசாலைகளுக்கு சென்ற போதிலும் அதிபர் ஆசிரியர்கள் வருகை இன்றி மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பி செல்லும்நிலை காணப்பட்டது.
இதேவேளை சில பாடசாலைகள் இன்று திறக்கப்பட்ட போதிலும் கற்றல் செயற்பாடுகள் இடம்பெறவில்லை. குறைந்தளவான மாணவர்களே வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நுவரெலியாவில் பாடசாலைகள் பலவற்றின் முன் வாயிற்கதவு திறக்கபட்டிருந்த போதிலும் வகுப்பறைகள் பூட்டப்பட்டு இருந்ததை காணக்கூடியதாக இருந்தது.