” இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்த தலைவர், அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்த நாளில் கொழும்பை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். அவரின் அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது. அநுரவுக்கும் அஞ்சவில்லை.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் பேச்சாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்சவின் வெளியேற்றம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
” செப்டம்பர் 11 என்பது உலகில் பலம்பொருந்திய நாட்டுக்கும் பயங்கரவாதத்தின் அச்சம் தென்பட்ட நாளாகும். செப்டம்பர் 11 தாக்குதல் நடந்த நாளாகும்.
பயங்கரவாதிகளிடம் இருந்து இலங்கையை பாதுகாத்த தலைவர் இப்படியானதொரு நாளில் அதிகாரப்பூர்வ வதிவிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஓய்வுபெற்ற பின்னர் அவருக்கு இந்த வீட்டை (விஜேராம) வழங்குமாறு நான் யோசனை முன்வைக்கின்றேன்.
மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெறப்போவதில்லை. தங்காலையில் இருந்துதான் அவரது பயணம் ஆரம்பமானது. எனவே, அங்கிருந்து புதிய பயணம்கூட ஆரம்பமாகலாம்.
அநுரவின் அரசியல் அழுத்தங்களுக்கு நாம் அஞ்சவில்லை. மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் அல்ல அதற்கு மேல் இருந்தாலும் அரசியல் அச்சுறுத்தல்களுக்கு நாம் அடிபணியபோவதில்லை.” – என்றார்.