வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,50,000-இற்கும் அதிகமானோர் வௌிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக சென்றுள்ளனர்.
இவர்களில் அதிகளவானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கே சென்றுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.
இந்த வருட இறுதிக்குள் 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் வௌிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து பயணித்தவர்கள் மாத்திரமே இதில் உள்ளடங்குவதாகவும் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா குறிப்பிட்டார்.
இதேவேளை, வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் இருந்து இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் நாட்டிற்குக் கிடைத்த நேரடி அந்நியச் செலாவணி 476 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது.
தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ட்விட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
2022 ஜூன் மாதத்தில் இந்த பெறுமதி 274 மில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்டது.
இதனிடையே, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்குக் கிடைத்த மொத்த நேரடி அந்நியச் செலாவணி, 2823 மில்லியன் அமெரிக்க டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.










