மலையக மக்கள் முன்னணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், சந்திரசேகரன் மக்கள் முன்னணியில் இணையவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இது தொடர்பில் அரவிந்தகுமார் எம்.பிக்கும், சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் அனுசா சந்திரசேகரனுக்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது எனவும், இது தொடர்பில் விரைவில் இறுதி முடிவு எட்டப்படலாம் எனவும் நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அரவிந்தகுமார் எம்.பிக்கென பதுளை மாவட்டத்தில் வாக்கு வங்கியொன்று இருப்பதுடன், மலையக மக்கள் முன்னணியின் அரசியல் மற்றும் தொழிற்சங்க இயந்திரம் கடந்தகாலங்களில் அவரின் வழிகாட்டலுடனேயே இயங்கின என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, கடந்த பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட அனுசா சந்திரசேகரனும் குறிப்பிட்டளவு வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில் இவ்விருவரின் சங்கமமானது முன்னணிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
