அன்று 13 பிளஸ் என கூறிய மஹிந்த இன்று அதிகாரப் பகிர்வை எதிர்ப்பது ஏன்?

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடாகும். தீர்வு விடயத்தில் இதற்கு அப்பால் செல்லமாட்டோம் – என்று முன்னாள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

13 பிளஸ் என அன்று கூறிய மஹிந்த ராஜபக்ச, இன்று வாக்குகளுக்காக அதிகாரப்பகிர்வு தொடர்பில் வீண் அச்சத்தை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்திவருகின்றார் எனவும் கிரியல்ல குற்றஞ்சாட்டினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவால்  விசேட அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டின் அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதே எமது நோக்கமாகும். இதுவே தீர்வு திட்டத்துக்கான எமது உறுதிமொழியாகவும் இருக்கின்றது. அதிகாரப்பகிர்வை நாம் ஏற்கின்றோம் – அனுமதிக்கின்றோம்.

குறிப்பாக 13 ஆவது திருத்தச்சட்டத்திலுள்ள அதிகாரங்கள் போதாது, அதற்கு அப்பால் (13 பிளஸ்) செல்லவேண்டும் என்று மஹிந்த ராஜபக்ச அன்று கருத்து வெளியிட்டிருந்தார். நாம் 13 பிளஸ் பற்றி பேசவில்லை. 13 இல் உள்ள அதிகாரங்கள் முழுமையாக பகிரப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தோம். வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்ல ஏனைய மாகாணங்களுக்கும் இந்த அதிகாரப்பகிர்வு கோட்பாடு பொருந்தும்.

தேர்தல் தொடர்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்புமூலம் ஆளுங்கட்சிக்கு சாதாரணப்பெரும்பான்மைக்கூட கிடைக்காது (113) என்பது உறுதியாகியுள்ளது. எனவே, ஐக்கிய மக்கள் சக்தியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியமைத்துவிடும் என ஆளுந்தரப்பு அஞ்சுகின்றது.

இந்த பயம்காரணமாகவே இனவாதம் பேசி வாக்குகளை அதிகரித்துக்கொள்வதற்காக சஜித் பக்கமே இனவாதிகள் உள்ளனர் என பரப்புரை முன்னெடுக்கப்படுகின்றது.” – என்றார்.

Related Articles

Latest Articles