அபுதாபியில் இந்து கோவிலை திறந்து வைத்தார் மோடி!

அபுதாபியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார்.

2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்தார். நேற்று முன்தினம் துபாய் வந்த பிரதமர் மோடி, அந்த நாட்டு அதிபர் முகமதுபின் சையது அல் நஹ்யானை சந்தித்துப் பேசினார் . இதன் பிறகு இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

இந்நிலையில் நேற்று மாலை அபுதாபியில் ரூ.700 கோடி (இந்திய மதிப்பு) செலவில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்துப் பார்வையிட்டார். பின்னர் அங்கு நடைபெற்ற பூஜைகளிலும் அவர் கலந்துகொண்டார்.

துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் இந்த சுவாமி நாராயண் கோயில் கட்டப்பட்டுள்ளது. பிஏபிஎஸ் அமைப்பு சார்பில், பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக இந்த சுவாமி நாராயண்கோயில் எழிலுற அமைந்துள்ளது.

இளஞ்சிவப்பு ராஜஸ்தான் மணற்கல் மற்றும் வெள்ளை இத்தாலிய மார்பிள் கற்கள் இந்தியாவில் செதுக்கப்பட்டு பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கோயிலில் பயன் படுத்தப்பட்டன.

அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நன்கொடையாக வழங்கிய 27 ஏக்கரில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி துபாய் சென்ற போது நிலத்தை தானமாக வழங்கினார் இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான். இந்த பிரமாண்டமான கோயிலில் ஒரே நேரத்தில் 10,000 பேர் வரை தங்க முடியும்.

Related Articles

Latest Articles