தகவல் – இ.தொ.கா. ஊடகப்பிரிவு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எனும் ஆழமரத்தின் ஆணிவேர் என நாமம் கொண்ட பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் 108 வது ஜனன தினம் (ஆகஸ்ட் 30) அனுஷ்டிக்கபடுகின்றது.
ஒவ்வொரு வருடமும் மிகச் சிறப்பாக நினைவுக்கூரப்படும் ஐயாவின் ஜனன தினம் நாட்டில் நிலவியுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இம்முறை நினைவுக்கூறல் நிகழ்வுகள் இடம்பெறவில்லை.
இருப்பினும் கொட்டகலை CLFல் உள்ள அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்களின் காந்தீக கொள்கை வாதி தலைவராகவும், மலையக மக்களின் தந்தையாகவும் போற்றப்பட்ட தலைவரில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவுக்கு என்று மதிப்பு உள்ளது.
அமரர் கருப்பையா சீதாம்மை ஆகியோருக்கு ஐந்தாவது பிள்ளையாகவும் ஒரே ஆண் பிள்ளையாகவும் 30.08.1913 இல் பிறந்து, ஆதவன் எனும் பெயரில் செமியமூர்த்தி என்று குடும்ப நாமமான தொண்டமான் பெயர் கொண்டவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா ஆவார்.
இந்தியா புதுக்கோட்டை பகுதியில் முன்னை புத்தூரில் ராஜ பரம்பரையில் பிறந்தவர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள்.
1924 ஆம் ஆண்டு தனது 11வது அகவையில் இலங்கைக்கு காலடிடி பதித்த அவர், தனது தந்தையின் பராமரிப்பில் இறம்பொடை வேவண்டன் தோட்டத்தில் பூர்வீக இல்லத்தில் வசித்து வந்தார்.
தனது 14வது வயதில் கம்பளை புனித அந்திரேயர் கல்லூரியில் சேர்க்கப்பட்ட ஐயா அங்கு தனது கல்வியை தொடர்ந்துள்ளார்.
1927 ஆம் ஆண்டு கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட மகாத்மா காந்தியடிகளின் தீவிர பற்றாளராக விளங்கிய செமியமூர்த்தி ஐயா அவர்கள், காந்தியடிகள் உரையில் இந்தியாவிலிருந்து தோட்டப்பகுதிகளுக்கு பணியாட்களாக வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தப்பட வேண்டும் என அன்னலால் ஆற்றிய உரை சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து கல்வி கற்று வந்த காலப்பகுதியை தொடர்ந்து இந்திய விடுதலை இயக்கத்தில் கடும் ஈடுபாடு கொண்டு சௌமியமூர்த்தி ஐயா காந்தீக கொள்கைவாதியாக செயற்பட்டுள்ளார்.
1930 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஹட்டனில் இயங்கிய காந்தி சேவா சங்கத்தில் அக்கால இளம் தலைவர்களான இராசலிங்கம் மற்றும் வெள்ளையன் ஆகியோருடன் காந்தி பற்றாளரான செல்வந்த இளைஞராக சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவும் இயங்கி வந்துள்ளார்.
இக்காலப்பகுதியில் சுபாஸ் சந்திரபோஸ் சங்கத்திலும் இயங்கிய சௌமியமூர்த்தி ஐயா, முதல் மேடையில் கன்னியுரை நிகழ்த்தியும் உள்ளார்.
1932 ஆம் ஆண்டு தனது தாயாலும் சகோதரியாலும் பார்க்கப்பட்ட அன்னை கோதை அம்மையாரை திருமணம் முடித்துள்ளார்.
24.07.1939 ஆம் ஆண்டு இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில் அவரால் இலங்கை இந்திய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் இணைந்து பயணித்த சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் கம்பளை கிளை தலைவராக 13.08.1939இல் தெரிவு செய்யப்பட்டு இந்தியாவிலிருந்து வந்த தோட்ட தொழிலாளர் மக்களுக்கு சேவைகளை செய்ய வேண்டுமென பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.
1940ஆம் ஆண்டு சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் தந்தை கருப்பையா காலமானார்.
இதன் பின் மக்கள் சேவைக்காக தன்னை அர்பணித்து வரத்தொடங்கிய நிலையில் இந்திய எதிர்ப்பலை காரணமாக இலங்கை இந்திய காங்கிரஸ் ஊடாக மக்களின் பிரச்சினைகளை அனுக வேண்டி வந்துள்ளதால் அனேகமானோர்
மக்கள் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.
இதன் போது தோட்டத் தொழிலாளர் மக்களின் பிரச்சினைகளை அரசியல் கட்சியுடன் பேசமுடியாது தொழிற்சங்கத்துடன் மாத்திரமே பேசமுடியும் என்ற நிலையை தோட்ட நிர்வாகிகள் அறிவிக்க 1940 மே மாதம் இலங்கை இந்திய காங்கிரஸில் தொழிற்சங்க பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தலைவராக சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவும் செயலாளராக இடதுசாரி கொள்கையில் பயணித்த அப்துல் அஸீஸ் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் 08.09.1940 இல் இலங்கை இந்திய காங்கிரஸின் முதல் தொடக்க விழா கம்பளையில் எடுக்கப்பட்டு அதை சௌமிய மூர்த்தி தொண்டமான் தலைமை தாங்கி நடத்தியதே அவரின் முதல் அரசியல் விழாவாகும்.
இதன் இரண்டாவது விழா கண்டியில் 1942 இல் இடம்பெற்றும் உள்ளது, அதில் தலைவர் மாற்றமும் இடம்பெற்றுள்ளது. இதில் தோல்வி கண்ட சௌமியமூர்த்தி தொண்டமான் 1945 இல் நுவரெலியாவில் இடம்பெற்ற பொது குழுவில் வெற்றிபெற்று இ.இ.காங்கிரஸில் தலைவராக நியமனமும் பெற்றுள்ளார்.
சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் அரசியல், தொழிற்சங்க பொது பணியில் 1946 இல் கேகாலை பிரதேசத்தில் 360 குடும்பங்களுக்கு நில உரிமை பெற்று கொடுத்த 21நாள் போராட்டம் முதல் போராட்டமாகும். அத்துடன் முள்ளோயா போராட்டமும் முக்கிய பங்காகும்.
இவ்வாறு மக்கள் சேவையில் இடம்பிடித்த ஐயா 1947இல் இடம்பெற்ற 95 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
இதன்போது நுவரெலியாவில் இவர் 9368 வாக்குகள் பெற்றுள்ளார்.
தொடர்ந்து இலங்கை 1948இல் சுதந்திரம் பெற்ற பின் எழும்பிய இந்திய பாக்கிஸ்தான் குடியுரிமை பரிப்புக்கு எதிராக பாராளுமன்றத்தில் வாத பிரதிவாதங்களிலும் ஈடுப்பட்டுள்ள அவர் குடியுரிமை சட்டத்திற்காக பிரதமர் வாசஸ்தளத்தில் சத்தியாகிரக போராட்டத்தையும் பேரணியையும் நடத்தியுள்ளார்.
இதையடுத்து வந்த 1950 காலப்பகுதி தேர்தலில் பாராளுமன்ற அங்கத்துவம் இழக்கப்பட்ட பின் 1977இல் மீண்டும் ஒரே ஒரு தமிழராக பாராளுமன்றத்திற்கு தெரிவாகி 1999 ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் இறக்கும் வரை பாராளுமன்ற உறுப்பினராகவும், கிராமிய கைத்தொழில், கால்நடை வளர்ப்பு துறை போன்ற அமைச்சிகளில் அமைச்சராகவும் இருந்துள்ளார்.
தோட்டப்பகுதி கல்வியை அரசுடமையாக்கியதில் பெரும் பங்காற்றியவர், நில உரிமை போராட்டங்கள், தோட்ட தொழிலாளர்களின் குடியுரிமை போராட்டங்கள், சம்பள உயர்வு போராட்டங்கள் என பல போராட்டங்களையும் அபிவிருத்திகளையும், தொழில் வாய்ப்புகளையும்,கைத்தொழில் முயற்சிகளையும் படிப்படியாக முன்னெடுத்து மலையக மக்களின்மனதில் இன்றும் நீங்காத இடம்பிடித்துள்ளார்.
1958ஆம் ஆண்டில் தலைவர் அப்துல் அஸீஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸை ஆரம்பித்த பின் இலங்கை இந்திய காங்கிரஸ் இலங்கை ஜனநாயக காங்கிரஸ் என மாற்றப்பட்டு தொழிற்சங்க பிரிவு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தலைவராக சௌமியமூர்த்தி தொண்டமான் நியமனம் பெற்றுள்ளதுடன் பின் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எனும் பெயரில் மாத்திரம் அரசியல் மற்றும் தொழிற்சங்க கட்சி அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஸ்தாபக தலைவராக கொண்டு இன்றுவரை காணப்படுகிறது.
இந்த நாட்டில் இந்திய வம்சாவளி மக்களின் பாதுகாப்பு தலைவராகவும், உரிமைகள் பலவற்றை பெற்றுக்கொடுத்து மலையக மக்கள் மனதில் தெய்வமாக வாழும் ஐயா சௌமிய மூர்த்தி தொண்டமானின் நினைவுகளுடன் அவரின் 108வது ஜனன தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகிறது.