கண்டி, பன்விலை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பெரும் அமளி துமளிக்கு மத்தியில் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டது.
இதனை நிராகரித்த தவிசாளர் சபை நடவடிக்கைகளை ஒத்தி வைக்க முனைந்த போது சபைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலக முடியாது என்று கூறி சபையை ஒத்தி வைக்க முடியாது என்று எதிர்த்தரப்பினர் ஆர்ப்பரித்தனர். கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சபை நடவடிக்கைகளை சபைத் தலைவர் ஒத்திவைத்தார்.
சபை நடவடிக்கைகள் சூடுபிடித்தால் பிரதேச சபையை சூழ்ந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால் பன்விலை பொலிஸார் பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டனர்.பதற்றம் ஏற்படாதவாறு பாதுகாப்புக்கடமைகளில் அவர்கள் ஈடுபட்டனர்.
இதனிடையே மீண்டும் சபை நடவடிக்கைகளை கூட்டுமாறு செயலாளரிடம் எதிர்த்தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். மீண்டும் சபை நடவடிக்கைகளைக் கூட்டிய சபைத் தலைவர் எதிர்வரும் ஒன்றரை வருடங்களுக்காக அபிவிருத்தி கருதி வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
பொதுஜன பெரமுனவின் பங்காளிக்கட்சியான இ.தொ.கா உறுப்பினரும் உப தலைவருமான எம்.சிவகுமார் உள்ளிட்ட இ.தொ.கா உறுப்பினர்கள் பாதீட்டுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். பின்னர் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் பகிரங்க வாக்கெடுப்பு இடம் பெற்றது.
வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 8 வாக்குகளும்,எதிராக 7 வாக்குகளும் பிரயோகிக்கப்பட்டன. ஐக்கிய இடதுசாரி முன்னணியின் உறுப்பினர் பிரியந்த பதிரன நடு நிலைமை வகித்தார். இதன் காரணமாக ஒரு மேலதிக வாக்கினால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.










