இராஜதந்திர பிரச்சினையாலோ அல்லது இலங்கையை இலக்கு வைத்தோ அமெரிக்காவால் வரி விதிக்கப்படவில்லை – என்று பிரதி நிதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்ணான்டோ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு தொடர்பில் தெரிந்தோ அல்லது தெரியாமலோ சிலர் தவறான கருத்துகளை வெளியிட்டுவருகின்றனர்.
இலங்கையுடனான இராஜதந்திர பிரச்சினை காரணமாக அமெரிக்காவால் வரி விதிக்கப்படவில்லை. முழு உலகுக்கும் பரஸ்பர வரி விதிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு நாடும் இலக்கு வைக்கப்படவில்லை.
சில நாடுகளுடன் பூகோல அரசியல் பிரச்சினை இருக்கலாம். எம்முடன் அப்படி எவ்வித பிரச்சினையும் அமெரிக்காவுக்கு இல்லை.
அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பில் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்ததால்தான் ஏப்ரல் 2 வரி விதித்த கையோடு, ஏப்ரல் 3 ஆம் திகதி நாம் கலந்துரையாடலை ஆரம்பித்தோம். அமெரிக்காவுக்குகூட குழுவொன்று சென்று கலந்துரையாடல் நடத்தியது.
தெற்காசியாவில் இந்தியாவுக்கு அடுத்தப்படியாக இலங்கையே துரிதமாக செயற்பட்டுள்ளது என அமெரிக்காகூட பாராட்டியுள்ளது.”- என்றார்.