அமெரிக்காவின் வரி விதிப்பு 90 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒன்றினைந்து சிறந்த தீர்வொன்றை எடுக்க வேண்டும் என்று இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி. அறைகூவல் விடுத்துள்ளார்.
” அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேர்தலுக்கு முன்னதாகவே வரி விதிப்பு சம்பந்தமாக கருத்து வெளியிட்டிருந்தார். அப்போதே நாம் ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தால் இன்று இவ்வாறான ஒரு சிக்கலுக்கு முகங்கொடுத்திருக்க வேண்டியதில்லை என சர்வக்கட்சி மாநாட்டில் சுட்டிக்காட்டினேன்.” எனவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
சர்வக்கட்சி கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு முன்வைத்துள்ள முன்மொழிவுகள் என்பவற்றை ஒன்றிணைத்து அடுத்தக்கட்ட கலந்துரையாடல் இடம்பெறும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.










