அமெரிக்காவின் வரி விதிப்பை அரசு எவ்வாறு எதிர்கொள்ளபோகின்றது?

 

” அமெரிக்காவின் பரஸ்பர தீர்வை வரிக்கு அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?”

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சகல பொருட்களுக்கும் 30 வீத பரஸ்பர தீர்வை வரியை விதித்துள்ளார்.
இது இலங்கை நாட்டின் ஏற்றுமதிகளின் மீது கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆடை, தேயிலை, இறப்பர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மீன்பிடித் துறைகளுக்கு கடுமையான எதிர்மறையான தாக்கத்தை இதை கொண்டு வரும்.

நமது நாட்டின் ஏற்றுமதியில் 26.4 சதவீத பங்களிப்பைப் பெற்றுத் தரும் ஏற்றுமதி தலமாக அமெரிக்கா திகழ்ந்து வருகிறது. 2024 ஆம் ஆண்டில் நமது நாட்டின் ஏற்றுமதி மதிப்பு 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். 30மூ தீர்வை வரி விதிக்கப்படுவதால் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தீர்வை வரி விதிப்பு குறித்து விசேட கருத்தை இன்று (10) வெளியிட்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு கூறினார்.

இந்த கட்டமைப்பு சார் வர்த்தக நிலுவை தொடர்ந்து நீடித்து வரும். ஏற்றுமதி இடங்களை பல்வகைப்படுத்துவதன் மூலமே இதைத் தவிர்க்கலாம். விதிக்கப்பட்ட 44மூ வரியிலிருந்து 30மூ ஆக குறைக்கப்பட்டமையானது நமது நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று பலர் கருதினாலும், இவ்வளவு உயர் மட்ட தீர்வை வரியை விதிப்பதானது நமது நாட்டிற்கு பெரும் தீங்கை விளைவிக்கும். இதனால் வியட்நாம் மற்றும் வங்களாதேசம் போன்ற நாடுகளுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும்.

ஆடைத் துறையில் நாம் கொண்டிருக்கும் உயர் தயாரிப்பு நாமத்தை இழக்கும் நிலை ஏற்படலாம். பெறுமதி சேர் தேயிலை மற்றும் இறப்பர் சார்ந்த பொருட்களுக்கும் இதனால் பெரும் தாக்கம் ஏற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கம் இந்தப் பிரச்சினையைக் கண்டு, நமது நாட்டிற்கு சிறந்த தீர்வைக் காண தன்னால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறதா என்ற கேள்வி எம்மத்தியில் காணப்படுகின்றது. இந்தப் பிரச்சினை எழுவதற்கு முன்பே, ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வெற்றியைத் தொடர்ந்து என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து பாராளுமன்றத்திலும் வெளியிலும் அரசாங்கத்திற்கு நாம் எச்சரிக்கை விடுத்தோம்.

நாட்டிற்காக, மக்களுக்காக, ஏற்றுமதித் துறைக்காக இராஜதந்திர ரீதியான கடமை இதில் நிறைவேற்றப்பட்டதா என்பதில் பிரச்சினை காணப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தி பின்பற்ற வேண்டிய ஒழுங்குகள் சரியாக பின்பற்றப்பட்டதா என்பதிலும் பிரச்சினை இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களுடன், குறிப்பாக இலங்கையுடன் உறவுகளைக் கொண்டவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும். அவர்கள் மூலம் அமெரிக்க அரசாங்கத்தின் மீது அதிகபட்ச அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும். வரிச் சட்டத்துக்கு இரு அவைகளிலும் குறைந்த பெரும்பான்மையினரால் அங்கீகரிக்கப்பட்டதால், நமது நாடு இந்த சூழ்நிலைகளைச் சரியாக பயன்படுத்திக் கொண்டு பொருத்தமான செல்வாக்கை பிரயோகிக்க வேண்டும். இந்த வாய்ப்பை அரசாங்கம் முறையாகப் பயன்படுத்தியுள்ளதா என்ற கேள்வி உள்ளது.

உலக வர்த்தக அமைப்பின் மூலம் செலுத்தக்கூடிய அழுத்தம் முறையாகப் பயன்படுத்தப்பட்டதா என்ற கேள்வியும் காணப்படுகின்றது. இந்த தீர்வை வரிகள் விதிக்கப்படுவது நமது நாட்டின் பல்வேறு துறைகளின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கம் வழங்கும் பதில்களும் தீர்வுகளும் என்ன ? நாம் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

தொழில் இழப்புகள் மற்றும் தொழிற்சாலைகளை மூடுதல் என்பன சமூகப் பேரழிவை உருவாக்கக்கூடும். இது வறுமை அதிகரிப்பதற்கு காரணமாகவும் அமையும். இதுபோன்ற சூழ்நிலையில், இந்தப் பிரச்சினைக்கான தெளிவான தீர்வை அரசாங்கத்திடமிருந்து அறிந்து கொள்வது எமக்கு அவசியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி என்ற வகையில், ஐக்கிய மக்கள் சக்தி நாட்டிற்கும், மக்களுக்கும், ஏற்றுமதித் துறைக்கும் தன்னால் முடிந்த அதிகபட்ச ஒத்துழைப்பை இதற்குப் பொற்றுத் தரும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles