அமெரிக்காவில் பயணிகள் விமானம் மற்றும் இராணுவ ஹெலிகாப்டர் என்பன மோதிக்கொண்டதில் ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களில் 18 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு அருகிலுள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் தரையிறங்கும் போது அமெரிக்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானமும், பயிற்சியில் ஈடுபட்ட இராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி விபத்தில் சிக்கியது.
இதில் பயணிகள் விமானம் பல துண்டுகளாக போடோமாக் ஆற்றில் சிதறிக் கிடப்பதாக களத்தில் இருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன. ஹெலிகாப்டர் ஆற்றுக்கு அருகே விழுந்துள்ளது.
இந்த விபத்தை அடுத்து இராணுவம், காவல் துறை மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் இறங்கினர். ஹெலிகாப்டர் மற்றும் படகு மூலமாக அங்கு மீட்பு பணி நடந்து வருகிறது. இதில் இதுவரை 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் விமான புறப்பாடு மற்றும் தரையிறக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் அவசர நிலை குறித்த அறிவிப்பும் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 60 பயணிகள் மற்றும் 4 விமான பணியாளர்கள் பயணித்துள்ளனர். அதே போல ராணுவ ஹெலிகாப்டரில் மூன்று ராணுவ வீரர்கள் பயணித்துள்ளனர்.