அமெரிக்கா, ஐரோப்பா, கனடாவில் குரங்கம்மை நோய்

குரங்கம்மை நோய் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியாவில் பரவி உள்ளது பற்றி விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சுகாதார நிர்வாகங்கள் மற்றும் உள்ளூர் ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

பிரான்ஸ், இத்தாலி, சுவீடன் மற்றும் அவுஸ்திரேலியாவில் புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கலில் கடந்த புதன்கிழமை குரங்கம்மை சம்பவங்கள் பதிவான நிலையிலேயே தற்போது புதிய நாடுகளுக்கு பரவியுள்ளது. அதேபோன்று 13 சந்தேகத்திற்கு இடமான சம்பவங்கள் குறித்து கனடா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குரங்கம்மை நோய் மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவின் தொலைதூர பகுதிகளில் பொதுவாகப் பரவக்கூடிய நோயாக உள்ளது.

பயணங்களுடன் தொடர்புபட்டே இந்த பிராந்தியங்களுக்கு வெளியில் இந்த நோய் பரவுகிறது.

மிக அரிதான வைரஸ் தொற்றாக இருக்கும் குரங்கம்மை லேசான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்பதோடு பெரும்பாலான சம்பவங்களில் சில வாரங்களில் குணமடையக்கூடியதாக உள்ளது என்று பிரிட்டன் தேசிய சுகாதார சேவை குறிப்பிட்டுள்ளது.

இது மக்களிடையே இலகுவாக பரவாது என்பதோடு பொதுமக்களிடையே பரந்த அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்து சாத்தியம் குறைவாகவே உள்ளது.

கடந்த மே 7ஆம் திகதி பிரிட்டனில் முதல் தொற்று சம்பவம் பதிவானது. அந்த நோயாளி அண்மையில் நைஜீரியாவில் இருந்து பயணித்தவராவார். அவர் இங்கிலாந்துக்கு பயணிப்பதற்கு முன்னரே தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று பிரிட்டன் சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பிரிட்டனில் தற்போது உறுதி செய்யப்பட்ட ஒன்பது தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலங்கள் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் இவை உள்நாட்டில் பரவி இருக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles