அமெரிக்க இரகசிய ஆவண கசிவினால் பெரும் பரபரப்பு

ரஷ்யாவுடனான போரில் உக்ரைனின் பாதிப்புகள் உட்பட அமெரிக்காவின் நட்பு நாடுகள் பற்றி முக்கிய தகவல்களை அப்பலப்படுத்தும் மிக ரகசியமான ஆவணங்கள் கசிந்திருப்பதன் மூலத்தை கண்டறிய அமெரிக்கா போராடி வருகிறது.

இந்த ஆவணக் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கும்படி அமெரிக்க நீதித் திணைக்களத்திற்கு அந்நாட்டு பாதுகாப்புத் தலைமையகமான பெண்டகன் முறையாக கோரிக்கையை விடுத்துள்ளது.

கசியவிடப்பட்டிருக்கும் இந்த ஆவணங்கள் ட்விட்டர் உட்பட சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்க இராணுவத்தின் கூட்டுப் பணியாளர்களால் தயாரிக்கப்பட்ட தினசரி புதுப்பிக்கப்படும் பொதுமக்களுக்கு அல்லாத தகவல்களின் கோர்வையாக இந்த ஆவணங்கள் உள்ளன. இதில் உக்ரைன், சீனா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா தொடர்பாக உளவுத் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கசிந்த ஆவணங்களில் உக்ரைன், தென் கொரியா மற்றும் இஸ்ரேல் உட்பட அமெரிக்கா தனது நட்பு நாடுகளை மிக நெருக்கமாக உளவு பார்ப்பது வெளிப்படையாகியுள்ளது. இது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்திற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் கசியவிடப்பட்டிருக்கும் சில ஆவணங்கள் கற்பனையான தகவல்கள் மற்றும் ரஷ்யாவின் தவறான பிரசாரத்தைக் கொண்டிருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 23ஆம் திகதி இடப்பட்ட ‘இரகசியம்’ என்று அடையாளம் இடப்பட்டிருக்கும் ஓர் ஆவணம், உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தற்போதைய விகிதத்தில் கையிருப்புகளைத் தொடர்ந்தால், மே மாதத்திற்குள் வெடிபொருட்கள் தீர்ந்துவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு ஆவணத்தில், இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் சர்ச்சைக்குரிய நீதித்துறை சீரமைப்புகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனம் ஆதரவு அளிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இதனை அடிப்படை அற்றது என்று நெதன்யாகு அலுவலகம் மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

வெளியாகியுள்ள பல ஆவணங்கள் அமெரிக்காவிடமே இருந்ததால் இதனை அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரே அம்பலப்படுத்தியிருக்க வேண்டும் என பெண்டகனின் முன்னாள் அதிகாரியான மைக்கல் மல்ரே ரோய்ட்டர்ஸுக்கு தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன இதனை ரஷ்ய ஆதரவு சக்திகள் செய்திருப்பதற்கான நடவடிக்கைகளை நிராகரிக்க முடியாது என தெரிவிக்கும் அதிகாரிகள் விக்கிலீக்சிற்கு பின்னர் இவ்வளவு பெருமளவு தகவல்கள் கசிந்துள்ளது இதுவே முதல்தடவை என தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles