பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. எனினும், இந்தச் செய்தியை பிரதமரின் ஊடகப் பிரிவு மறுத்திருந்தது.
ஆனாலும், பிரதமர் கொத்தலாவல பாதுகாப்பு வைத்தியசாலைக்குச் சென்று திரும்பியிருந்தார் என்று குருவி நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.
கொவிட் நெருக்கடி குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி தலைமையில் நேற்று விசேட கூட்டமொன்று கூடியுள்ளது. இதில் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவும் கலந்துகொண்டுள்ளார். இதற்கு முன்னதாக அவர் பீ.சீ.ஆர். பரிசோதனை செய்துகொண்டுள்ளார்.
கொவிட் தடுப்பு விசேட கூட்டம் முடிவுக்கு வந்து சுமார் அரை மணி நேரத்தில் அமைச்சர் பந்துலவிற்கு கொவிட் தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட செய்தி வந்துள்ளது. இதன்பின்னர் அவசர அவசரமாக அங்கு கூடியிருந்த அனைவருக்கும் பீ.சீ.ஆர் மற்றும் துரித ரெப்பீட் பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவுகள் வரும் வரை அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருக்கும் செய்தியை வெளியிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்சவும் அவசரமாக கொத்தலாவ பாதுகாப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. எனினும், ஜனாதிபதி, பிரதமர் என எவருக்கும் கொவிட் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.
கொவிட் தொற்று இருக்கும் அமைச்சர் பந்துல குணவர்தனவும் லங்கா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு ஆரோக்கத்துடன் இருப்பதால் வீடு திரும்ப அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்களுக்கு கொவிட் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. அதன்பின்னரே அமைச்சர் பந்துல குணவர்தன கொவிட் தொற்றுக்கு உள்ளான செய்தி வெளியாகியுள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை பிரதமர் அலுவலகம் மறுத்திருந்த போதிலும், பிரதமர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்ட பின்னர் வீடு திரும்பினார் என்ற செய்தியை உறுதிப்படுத்த முடிந்தது.
ஜனாதிபதி தலைமையில் நடந்த கூட்டத்தில் கொவிட் தொற்றுடன் அமைச்சர் பந்துல குணவர்தன கலந்துகொண்டிருந்த போதிலும், எவருக்கும் கொவிட் தொற்று ஏற்படவில்லை என்று இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










