வேளாண்மை அறுவடையின் பின்னர் புற்களைத் தேடி யானைக் கூட்டம் படையெடுத்து வருகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் திடிரென சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வளத்தாப்பிட்டி வில்லுக்குளப் பகுதிகளை ஊடறுத்து யானைகள் இவ்வாறு வருகை தந்துள்ளன.
இதன்போது யானைகள் அங்குள்ள புற்களை உண்டன. கூட்டத்தில் உள்ள யானை குட்டிகள் விளையாடுவதையும் காண முடிந்தது. பெரிய யானைகள் மற்றும் குட்டிகள் என 100 இற்கும் அதிகமான யானைகள் அந்தப் பகுதியில் உள்ள அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களை நோக்கி வருகை தந்திருந்தன. தினமும் அந்தப் பகுதிக்கு வரும் யானை கூட்டத்தை மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
இவ்வாறு வயல்வெளிகளை நோக்கி வருகை தந்துள்ள யானைகள் ஊருக்குள் பிரவேசிக்க முடியாத வகையில் பார்வையாளர்களாக உள்ள மக்கள் சத்தங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர். இந்தப் பிரதேசத்தில் அண்மையில் வேளாண்மை அறுவடை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தீ வைக்கப்படுவதனாலும் அங்கு கொட்டப்படும் குப்பைகளை யானைகள் உண்பதற்கு வருகை தருகின்றன என்றும் அருகில் உள்ள பொது மக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.










