ராஜீவ் காந்தி கொலை வழங்கியில் இருந்து விடுதலையாகிய, சாந்தன் இவ்வாரம் நாடு திரும்பவிருந்த நிலையிலேயே இன்று காலை உயிரிழந்துள்ளார் என தெரியவருகின்றது. இச்சம்பவம் தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல வருடங்களுக்கு பிறகு தனது மகனை காண தாயும், தாய் மடியில் மீண்டும் ஒருமுறையாவது தலைவைத்து படுத்து, கட்டியணைத்து கதறி அழுது, மனதுக்குள் இருந்த துன்பங்களை கொட்டி தீர்க்க வேண்டும் என மகனும் காத்திருந்து – அது கைகூடுவதற்குள் இப்பெரும் துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளமை விழிநீரை பெருக்கெடுக்க வைக்கின்றது.
தமிழ் உணர்வாளர்கள், செயற்பாட்டாளர்கள் என பலரும் சமூகவலைத்தளங்களில் இது தொடர்பில் பதிவிட்டுவருகின்றனர்.
சாந்தன் இலங்கை வருவதற்கான அனுமதியை இந்திய மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை வழங்கியது. அதன் பின்னர் சில ஆவணங்கள் தேவையாக இருந்ததால் அவரது பணயம் தாமதமாகியது.
இலங்கை புறப்பட தயாராக இருந்த நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதிதீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.
ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், திருச்சி சிறப்பு முகாமில் குடிவரவு சட்டத்தின் கீழ் கடந்த ஒரு வருடமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, சாந்தனின் பூதவுடலை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன என்று தெரியவருகின்றது.