அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை அரசாங்கம் உடனடியாக தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிணைந்த அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கொழும்பில் நேற்று (26) மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தின.
இதன்போது அதிபர், ஆசிரியர்கள் மீது பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மற்றும் அடிதடி நடத்தினர். இதனை வன்மையாக கண்டித்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தலவாக்கலை பொது பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இன்று (27)
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பாலசேகரம் உட்பட ஆசிரியர்கள் பலர் இப்போராட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.
கல்விசமூகத்தின் மீது அடக்கு முறையை பிரயோகிக்காதே, எமது உரிமையை கேட்பது அரசாங்கத்திடமா IMF இடமா? அதிபர், ஆசிரியர் மீது வன்முறையை பிரயோகிக்காதே, அதிபர்,ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியும் இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தலவாக்கலை பி.கேதீஸ்