கடந்த காலங்களில் அரசியல் மயமாக்கப்பட்டிருந்த பொலிஸ் துறைக்கு தற்போது முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பொலிஸ்துறை கடந்த காலத்தில் அரசியல் மயமாக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து நாம் அத்துறையை விடுவித்துள்ளோம். பொலிஸாருக்கு தற்போது சுயாதீனமாக செயல்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதற்கமைய பொலிஸார் மிகவும் திறமையுடன், துணிவுடன் தற்போது செயற்படுகின்றனர்.
கடந்த காலங்களில் அரசியல் தலையீடுகளால் நிறுத்தப்பட்ட விசாரணைகள் தற்போது மீள ஆரம்பமாகியுள்ளன.பாதாள குழுக்கள் தலைதூக்குவதற்கு கடந்த காலங்களில் இடமளித்துவிட்டு, அவற்றை ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று இன்று எம்மிடம் கேள்வி எழுப்புகின்றனர்.
பொலிஸாரின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன எனக் கூறப்படுவதும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறப்படுவதும் பொய்யாகும். மக்களின் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.” – என்றார்.










