“ அரச ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு தொகையை கொரோனா நிதியத்துக்கு அறிவிடுவதற்கு இன்னும் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், அவ்வாறானதொரு தியாகத்தை செய்யுமாறு வேண்டுகோள் மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது.” – என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது, நாடு முடக்கப்படுமானால் அரச ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு தொகையை அறிவிட வேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். எனவே, அவ்வாறானதொரு தீர்மானத்தை அரசு எடுத்துள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ அவ்வாறானதொரு தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை. எனினும், நெருக்கடியான சூழல்களின்போது தியாகங்களை செய்யநேரிடும். உதாரணமாக தாய்லாந்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டபோது அந்நாட்டிலுள்ள ஆன்மீகத் தலைவர்கள், விகாரைகளில் இருந்த தங்கங்களை மத்திய வங்கியிடம் ஒப்படைத்து தியாகம் செய்தனர்.
அதேபோல வடக்கு, கிழக்கு போரின்போது நாடுகளும், தனி நபர்களும் நன்கொடைகளை வழங்கினர். நமக்காக நாம் நிதியத்துக்கு நானும் எனது நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளத்தொகையை வழங்கினேன். தற்போது கொவிட் நிதியத்துக்கு சம்பளத்தை வழங்கியுள்ளேன். மேலும் சில அரசியல் பிரமுகர்களும் தம்மால் முடிந்த பங்களிப்பை செய்துவருகின்றனர்.
எனவே, உதவி செய்யக்கூடிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களிடமிருந்த அந்த உதவியை எதிர்ப்பார்க்கின்றோம். இதன்பிரகாரமே சம்பளத்தை ஒரு தொகையை வழங்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க யோசனை முன்வைத்துள்ளார். பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி வழங்குவதற்காகவே குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.” – என்றார்.