சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாலேயே கட்டுப்பாட்டு விலையை நீக்க வேண்டி ஏற்பட்டது. வெளிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டதும் குறைந்த விலைக்கு அரிசி விநியோகிக்க கூடியதாக இருக்கும் – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” விவசாய அமைச்சர் என்ற வகையில் வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்யும் விடயத்துடன் நான் உடன்படவில்லை. அமைச்சரவையில் இதற்கு தொடர்ச்சியாக எதிர்ப்பை வெளியிட்டு வந்தேன். அதேபோல சந்தைக்கு நெல் வழங்குவதை நிறுத்தாது, தொடர்ச்சியாக வழங்குமாறும், அரிசி தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க வேண்டாம் எனவும் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்தும் வந்தேன். நெல்லுக்கு கட்டுப்பாட்டு விலையையும் அறிவித்தேன். ஆனால் அது போதாது என்று விவசாயிகள் நெல் வழங்குவதை நிறுத்தினர்.
இதனால் சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. கடும் விமர்சனங்களும் எழுந்தன. விவசாயிகள் நெல்லை வழங்கவில்லை எனில், சந்தையில் அரிசி தட்டுப்பாடு உள்ளதெனில் முன்னெடுக்க வேண்டிய மாற்று நடவடிக்கை என்ன? அதனால்தான் விருப்பம் இல்லாவிட்டால்கூட அரிசி இறக்குமதி செய்ய முடிவெடுக்கப்பட்டது.
அரிசி ஆலை உரிமையாளர்கள் ஊடக சந்திப்புகளை நடத்தி, விலைகளை அறிவிக்கலாம். ஆனால் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதும் அந்த விலை மாறும். நாட்டரிசிக்கு 120 ரூபாவை நிர்ணயித்துள்ளனர். அரிசி இறக்குமதி செய்யப்பட்டதும் அதனை 95 ரூபாவுக்கு வழங்கலாம். அரிசி விலை அதிகரிப்பை தடுப்பதும் இறக்குமதியின் மற்றுமொரு நோக்கமாகும். ” – என்றார்.