அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் அரவிந்தகுமாரை கட்சியில் இருந்து இடைநிறுத்தும் முடிவை மலையக மக்கள் முன்னணி எடுத்திருந்தது. அத்துடன், கட்சியின் எந்தவொரு செயற்பாட்டிலும் பங்கேற்கக்கூடாது எனவும் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தனக்கு வாக்களித்த மக்களுக்காக மனசாட்சியின் பிரகாரம் தான் செயற்பட்டுவருவதாக அரசியல் விஞ்ஞான விளக்கம் வழங்கியுள்ள அரவிந்தகுமார், சில நாட்களுக்கு முன்னர் ஊவா மாகாண ஆளுநரை சந்தித்திருந்தார்.மேற்படி சந்திப்புக்கு மலையக மக்கள் முன்னணியின் பதுளை மாவட்ட அமைப்பாளர்களையும், செயற்பாட்டாளர்களையும் அவர் அழைத்துச்சென்றிருந்தார்.
கட்சி செயற்பாடுகளில் பங்கேற்க அவருக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் கட்சி உறுப்பினர்களை எவ்வாறு சந்திப்புக்கு அழைத்துச்செல்ல முடியும் என்ற சர்ச்சை தற்போது வெடித்துள்ளது. இதன் பின்னணியில் அரசியல் காய்நகர்த்தல் இருப்பதாக கருதப்படுகின்றது.
அதாவது தனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டால் பதுளை மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணிக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது எனவும், செயற்பாட்டாளர்கள் எல்லாம் தனது பக்கமே நிற்கின்றனர் என்பதையுமே இச்சந்திப்புமூலம் அரவிந்தகுமார் காட்டியுள்ளார்.
இதனால் அரவிந்தகுமாருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் மலையக மக்கள் முன்னணி சற்று தயக்கம் காட்டிவருவதை காணமுடிகின்றது.