பாராளுமன்றம் செயற்பட்ட கடந்த நான்கரை வருடங்களில் விமர்சன அரசியல் நடத்தியவர்களுக்கு மத்தியில் நாம் வினைத்திறன்மிக்க சேவைகளை மக்களுக்காக முன்னெடுத்தோம். எனவே, ஆக்கப்பூர்வமான அந்த அரசியல் பயணத்தை தொடர்வதற்கு கண்டி மாவட்ட மக்கள் இம்முறையும் பேராதரவை வழங்குவார்கள் – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.
கண்டியில் இன்று (27.07.2020) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் வேலுகுமார் மேலும் கூறியவை வருமாறு,
“ தமிழ் முற்போக்கு கூட்டணி ஆளுங்கட்சியின் பங்காளியாக இருந்தபோதிலும் ஒருபோதும் சலுகைகளுக்கு அடிபணிந்து தலையாட்டும் அரசியலை நடத்தியதில்லை. ஆளுங்கட்சிக்குள் இருந்துக்கொண்டே போராடியது. அதன்காரணமாகவே அபிவிருத்தி மற்றும் உரிமை அரசியலை சமாந்தரமாக முன்னெடுக்ககூடியதாக இருந்தது. பல தசாப்தங்களாக செய்துமுடிக்கமுடியாமல்போன திட்டங்களைக்கூட வெற்றிகரமாக முன்னெடுத்து பெருந்தோட்டப்பகுதிகளையும் அரச நிர்வாகப்பொறிமுறைக்குள் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனவே, 2015 ஆம் ஆண்டு மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம், அவர்கள் எதிர்ப்பார்த்தவற்றை எம்மால் முடிந்தளவு நிறைவேற்றக்கூடியதாக இருந்தது. மேலும் சில திட்டங்களுக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது. இன்னும் 5 ஆண்டுகள் கிடைத்தால் நிச்சயம் அவற்றையும் செய்துமுடிப்போம். இது மக்களுக்கும் தெரியும். அதனால்தான் எம்மால் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களில் பங்கேற்று பேராதரவை வழங்கிவருகின்றனர்.
அதேவேளை, தமிழ் பேசும் மக்களின் தலைவிதியை தீர்மானிக்கப்போகின்ற தேர்தல் இதுவாகும். இத்தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையில் நாம் வெற்றிபெறுவோம் என்பது உறுதி. சிலவேளை, நிலைமை மாறினால்கூட நாம் பாராளுமன்றத்தில் பலமாக இருக்கவேண்டும். அப்போதுதான் எமது இருப்பையும், தமிழ் பேசும் சமூகத்துக்கு எதிரான பிரேரணைகளையும் தடுக்ககூடியதாக இருக்கும்.
எனவே, தனிநபர்களை தெரிவுசெய்து பாராளுமன்றம் அனுப்பும் தேர்தலாக அல்லாமல் சமூகத்தின் இருப்பை, எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் தேர்தல் என்பதால் மக்கள் மதிநுட்பத்துடன் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும்.” – என்றார்.