ஆசிய கிண்ண போட்டி – இந்தியாவின் ஆட்டங்களை பொது இடத்தில் நடத்த பாக். பரிந்துரை

எதிர்வரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை கலப்பு வடிவத்தில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பரிந்துரைத்துள்ளது. இதன்படி பாகிஸ்தான் தனது ஆசிய கிண்ணப் போட்டிகளை சொந்த மைதானத்தில் ஆடும் என்பதோடு இந்தியா தனது போட்டிகளை பொது இடத்தில் ஆடும் என்று பாக். கிரிக்கெட் சபை தலைவர் நஜாம் செதி தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதற்றம் காரணமாக இந்திய அணி பாக். செல்வதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை நிராகரித்துள்ளது.

எனினும் தொடரின் பெரும்பகுதியை பாகிஸ்தானில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் சபை எதிர்பார்த்துள்ளது. இந்நிலையில் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சபைக்கான மாநாட்டில் பங்கேற்க பாக். வெளியுறவு அமைச்சர் பிலவால் பூட்டோ சர்தாரி அடுத்த மாதம் கோவா பயணிக்க உள்ளார். இந்தப் பயணத்தில் இதற்கு தீர்வு கிடைக்கும் என்று செதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“ஆசிய கிண்ணத்தில் அனைத்து இந்திய போட்டிகளையும் பொது இடத்திற்கு மாற்ற பாகிஸ்தான் தீர்மானித்தால், இந்தியாவில் இந்த ஆண்டு ஒக்டோபர், நவம்பரில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கிண்ணத்தில் இதே கலப்பு முறையை இந்தியா பயன்படுத்த வேண்டும்” என்று செதி செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வலியுறுத்தியுள்ளார்.

“அனைத்தும் பரஸ்பரமான முறையில் இருக்க வேண்டும் என்பது தான் எமது நிலைப்பாடு. ஆம், கடந்த காலங்களில் பாகிஸ்தானில் பாதுகாப்புப் பிரச்சினை இருந்தது. ஆனால் தற்போது அப்படியான பிரச்சினை இல்லை. எனவே, பாகிஸ்தானில் விளையாடாமல் இருப்பதற்கு இந்தியா கூறும் நியாயம் தான் என்ன?” என்று செதி கேள்வி எழுப்பினார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் ஜேய் ஷாஹ் தலைமையிலான ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பாக். கிரிக்கெட் சபையின் இந்த கலப்பு வடிவத்திற்கு இன்னும் பதிலளிக்கவில்லை.

ஆசிய கிண்ண போட்டியில் இம்முறை ஆறு அணிகள் பங்கேற்கின்றன. பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷுடன் தகுதிகாண் போட்டி மூலம் மேலும் ஓர் அணி தேர்வு செய்யப்படவுள்ளது. இம்முறை ஆசிய கிண்ணப் போட்டிகள் உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும்.

Related Articles

Latest Articles