” சில்லறை அரசியல் நடத்தாமல், ஆட்சியை எப்படி கவிழ்ப்பதென பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” 8 ஆயிரம் பேரை கொழும்புக்கு அழைத்துவந்து, போராட்டம் நடத்தி ஆட்சியைக் கவிழ்க்கலாம் என எதிரணி நினைக்கின்றது. 8 ஆயிரம் பேரை வைத்துக்கொண்டு ஆட்சியைக்கவிழ்க்க முடியுமா? எதிரணியின் இந்த முயற்சி நகைச்சுவையானது.

எனவே, சில்லறைத்தனமான அரசியலை நடத்தாமல், ஆட்சியை எப்படி கவிழ்ப்பதென மஹிந்தவிடம் கற்றுக்கொள்ளுங்கள். மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருந்தால் இப்போது இவ்வாறானதொரு போராட்டத்தை நடத்தியிருக்கமாட்டார். சஜித்தின் இந்த நடவடிக்கைமூலம் எதிரணி மேலும் பலவீனம் அடையும்.
அரசு பலவீனம் அடையவில்லை. கூட்டணிக்குள் குழப்பம் என சிலர் கருதுகின்றனர். வரவு- செலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்படும்போது அரசின் ஒற்றுமை மீண்டும் தெரியவரும்.” – என்றார்.
