தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமிருந்த வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சியை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று கைப்பற்றியது.
இதற்கமைய சபையின் புதிய தவிசாளராக தர்மலிங்கம் பார்த்தீபன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு தடவைகள் தோற்கடிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து புதிய தவிசாளரை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. உறுப்பினர்களின் கோரிக்கையின் பிரகாரம் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இரகசிய வாக்கெடுப்பில் கூட்டமைப்பு மற்றும் சுதந்திரக்கட்சியின் சார்பில் முன்னிலையான இருவருக்கும் சமனாக வாக்குகள் கிடைத்தன. அதன்பின்னர் திருவுளச்சீட்டு மூலம் புதிய தவிசாளர் தெரிவுசெய்யப்பட்டார். சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் பெயர் தெரிவானது.










