நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அடக்குமுறையை கையில் எடுத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்க்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
மாபெரும் மக்கள் குரல் எனும் தொனிப்பொருளின்கீழ் கூட்டு எதிரணியால் நுகேகொடையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறினார்.
“ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கம், அடக்குமுறை ஆயுத்தை கையில் எடுத்துள்ளது.
போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையை நாம் எதிர்க்கவில்லை. போதைப்பொருளை பிடிக்கவும், துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் இருந்த போதைப்பொருளையும் கைப்பற்றுமாறு வலியுறுத்துகின்றோம்.
எதிரணி உறுப்பினர்களை அரசாங்கம் விமர்சிக்கின்றது, ஆனால் தமது கட்சி உறுப்பினர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதாகும்போது அது தொடர்பான செய்தியை வெளியிட தடை விதிக்கப்படுகின்றது. ஏன் இது? அரசாங்க அனுசரணையில் இயங்கும் குற்றக் குழுவொன்று நாட்டில் உள்ளது.
அரசாங்கத்தின் அனுசரணையுடன் நாட்டில் கலாசாரம் அழிக்கப்படுகின்றது. இதனை சுட்டிக்காட்டும்போது இனவாத முத்திரை குத்தப்படுகின்றது. தவறை சுட்டிக்காட்டும் முதுகெலும்பு எமக்கு உள்ளது என்பதை கூறிவைக்கின்றோம்.
நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். வேலை செய்வதற்கு ஆரம்பிக்க வேண்டும்.
மற்றுமொரு விடயத்தையும் நினைவு படுத்த விரும்புகின்றோம்.
நங்குகூரமிட்டு துறைமுகத்தில் தடுத்து வைப்பதற்காக கப்பல் செய்யப்படுவதில்லை. அது தனது பயணத்தின்போது பல சவால்களை சந்திக்க நேரிடும். நாம் மக்கள் சக்தியை கட்டியெழுப்புவது, கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே இந்த அரசாங்கத்தை கவிழப்பதற்கு என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.” – எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
