” ஆட்சி மாற்றத்துக்காக 2029 ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டியதில்லை. அதற்கு முன்னர்கூட ஜனநாயக வழியில் அது நடக்கலாம். அடுத்த ஜனாதிபதி நாமல் என்பது சமூகத்தின் கருத்தாகும்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிடுகையிலேயே அக்கட்சியின் பேச்சாளரான முன்னாள் எம்.பி. சஜ்ஜீவ எதிரிமான்ன மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அடுத்த ஜனாதிபதி யார் என்ற கருத்தாடல் சமூகத்தில் உருவாகியுள்ளது. அநுரதான் அடுத்த ஜனாதிபதி என்றோ அல்லது பிரதான எதிரணி ஆட்சியைக் கைப்பற்றும் என்றோ சமூகத்தில் கருத்துகள் இல்லை. நாமலை பற்றிதான் தேடப்படுகின்றது. நாமல்தான் அடுத்த ஜனாதிபதி என்ற கருத்தை நாம் உருவாக்கவில்லை. அது சமூகத்தின் பிரதிபலிப்பாக உள்ளது.
இயற்கையாகவேதான் அந்த கருத்தாடல் உருவாகியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 4 வருடங்கள் உள்ளன என்பது உச்சபட்ச கால எல்லையாகும். எனினும், அதற்கு முன்னர் ஆட்சியை மாற்றலாம். இலங்கையில் இதற்கு முன்னர் எப்படி நடந்தும் உள்ளது.
பதவி காலம் முடியும்வரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயணிக்கும் என்பதற்குரிய அறிகுறிகள் இல்லை. அரசியலமைப்பு ரீதியாகக்கூட ஆட்சி மாற்றம் இடம்பெறலாம். ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் நிகழக்கூடும்.” – என்றார்.