ஆப்கானிஸ்தானின் உலகக்கிண்ண கனவு பறிபோனது!

ரி – 20 உலகக்கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா அணி முன்னேறியுள்ளது.

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

இதில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள், தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அந்த அணியில் அஸ்மத்துல்லாவை (10 ரன்கள்) தவிர மற்ற பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட இரட்டை இலக்கத்தை தொடவில்லை. அந்த அளவுக்கு சிறப்பாக பந்து வீசிய தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஷாம்சி மற்றும் ஜேன்சன் தலா 3 விக்கெட்டுகளும், ரபடா மற்றும் நார்ஜே தலா 2 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, 57 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 8.5 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 60 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரீசா ஹென்ரின்க்ஸ் 29 ரன்களும், மார்க்ரம் 23 ரன்களும் அடித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தி உள்ளது. டி20 உலகக்கோப்பை வரலாற்றில் தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles